பயணமும் பிரிவும்
- Johneh Shankar
- 7 days ago
- 1 min read
மீண்டும் அதே தனிமை. என்னவளும், அவள் ஈன்றவளும் அண்ணன் மகளின் பெயர்சூட்டு விழாவிற்குச் சென்றிருக்கிறார்கள். என்னோடு இருப்பது தனிமை மட்டுமே. வேலை, என்னைச் செல்லவிடாமல் தடுத்துவிட்டிருக்கிறது.
எதிர்பாராத பிரிவு, தனிமையில் உறக்கம், வெறுமையான விழிப்பு, கலைந்து கிடக்கும் படுக்கையைப் போல ஒரு அழகில்லாத காலை. ஆனால் பிரிவு தவிர்க்க முடியாதது.
உறவின் வலையில் இருந்து பிரிக்க முடியாத ஒன்று பிரிவு. பிரிந்தும், இணைந்தும் தானே அந்த வலையே பின்னப்பட்டிருக்கிறது? அந்த மாயவலையில் அகப்படுவது சுகம், விடுபடுவது வலி.
ஏதோ ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பப் பேருந்துக்காகக் காத்திருந்தோம், சன்னலோர இருக்கை உனக்கு, உனக்கு அடுத்த இருக்கை எனக்கு என்று வாஞ்சையுடன் திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போதே, ஆடி அசைந்து வந்து சேர்ந்தது அந்த கடைசிப் பேருந்து. கூட்டமோ நிரம்பி வழிகிறது; அது வரை பேருந்து நிலையத்தின் வெவ்வேறு மூலைகளில் நின்றிருந்தவர்கள் கூட இந்தப் பேருந்தைக் குறிவைத்துத் தான் காத்திருந்த கழுகுகள் போல விரைந்து ஒன்று கூட, நீ முன் படியிலும், நான் பின் படியிலுமாக முண்டியடித்து ஏறி நுழைந்தால், உள்ளே ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக்கொள்ளக்கூட முடியாத அளவுக்கு மனிதக்கூட்டம். அடுத்த இரண்டு மணிநேரம் நீ பேருந்தில் தான் இருக்கிறாய் என்பதை அவ்வப்போது ஒலித்த உன் அலைபேசியின் சத்தமே எனக்கு உறுதிப்படுத்தியது. எப்படியோ ஒரு வழியாய், 1 மணி நேரம், ~30 நிறுத்தங்களுக்குப் பிறகு உட்கார எனக்கு இருக்கை கிடைத்தது. சன்னலோரத்தில் வேறு யாரோ. உன்னைக் கூப்பிடக் கூட முடியவில்லை. உனக்கும் இருக்கை கிடைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் உட்கார்ந்து கொண்டேன்.
நினைத்துப் பார்த்தால் வாழ்க்கையும் இப்படித்தான்; ஒன்றாகவே பயணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், கற்பனை செய்தாலும், எத்தனையோ திட்டங்கள் போட்டாலும், காலமும் சூழலும், விதியும் வினையும், பெருங்கூட்டமாய் வந்து நமக்கிடையே பிரிவை உண்டாக்கி நம்மோடு பயணம் செய்யும். எது எப்படியோ, இறங்குமிடம் நெருங்க நெருங்க, கூட்டம் குறைந்து கொண்டே வந்து, கடைசி 5 நிறுத்தங்களாவது உன்னருகில் நான் அமர்ந்து பயணம் செய்ய, அந்தப் பேருந்து வரமளித்தது.
போலவே, எத்தனை தூரமாயினும், எவ்வளவு பிரிய நேர்ந்தாலும், இறங்கும் இடம் வரும்போது, உன் கைப்பிடித்து ஒன்றாகவே இறங்க வேண்டும், அதுவே போதும் எனக்கு.
அன்புடன்,
உன்னவன்.

Comments