top of page

இரங்கற்பா - RJ Master of KRM Schools

  • Writer: Johneh Shankar
    Johneh Shankar
  • Nov 16, 2025
  • 1 min read

 பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய எங்கள் ஆர்.ஜே. மாஸ்டர்,

இன்னமும் கணக்கில் நான் மக்காகவே இருக்கிறேன்; ஆம் -

உங்களைச் சந்திக்க வேண்டும் என்று நான் கணக்குப் போட்ட 

நாள் இன்று திருந்தாப்பிழை ஆகிவிட்டது.



ஒழுக்கம் - என்ற ஒற்றைச் சொல்லில்

அடக்கி விடலாம் உங்கள் வாழ்க்கை வரலாற்றை!


கற்றதும், கற்ற பின் நின்றதும்,

எங்களுக்குக் கற்பித்ததும் கணக்கு மட்டுமல்ல,

ஒழுக்கமும் தான்.


கணக்குப்பாடத்தை முடிக்காமல் உங்களிடம்

பிரம்படி வாங்கியிருக்கிறேன், ஒருமுறை. 


அதற்குப் பின் வாழ்க்கையில் எங்கும் என்றும் 

அடி வாங்கியதே இல்லை! 


என் வாழ்வை நேர் செய்தது

உங்கள் வளைந்த பிரம்பு!


கண்டிப்புடன் கனிவும் சேர்த்துக் கல்வியை

ஊட்டும் பேராற்றல் கொண்ட வெகு சிலருள் ஒருவர் நீங்கள்! 


நீங்கள் ஆசிரியராக, நான் மாணவனாக

உங்கள் வகுப்பில் படிக்கும் பேறு

எனக்குக் கிட்டவில்லை! வருத்தம் தான். 


ஆனால் உங்கள் ஆசியை இரண்டொரு முறை

நேரில் பெற்றிருக்கிறேன் என்ற வகையில்

நான் பேருவகை கொள்கிறேன்.


எனக்கும் என் தலைமுறைக்கும்

அறிவின் முதலெழுத்தை அறிவித்தவர் நீங்கள்,

உங்கள் பாதச்சுவடுகளில் பாடம் படிக்கிறோம் நாங்கள். 


விட்டுச்சென்றாலும் எங்களை வீழவிடாதபடி

கல்வி + ஒழுக்கம் என்ற விண்ணைத் தொடும் இரட்டைக்கொடியின்

விதை ஒன்றை விதைத்துச் சென்றிருக்கிறீர்கள், ஐயா!


அதில் ஏறி வாழ்வில் உயரும் ஒவ்வொரு நாளும்,

அக்கொடியின் ஒவ்வொரு இலையிலும் பொன்னெழுத்துக்களால் 

எழுதிவைப்போம்,

கண்ணீருடன் நன்றி விரவிய நினைவுடன் உங்கள் பெயரை.


 
 
 

© 2023 by Johneh Shankar.

Thinks to live.
Writes to live forever.

Welcome to my Blog. Lessons I've learnt, learning and will learn in my life will come to stay here as words from the bottom of my heart. Thank you for visiting.

bottom of page