top of page

ௐ - விஜயின் அரசியல் ஜல்லிக்கட்டு தொடங்குகிறது - வெற்றி யாருக்கு? - TVK Landslide Victory 2026

  • Writer: Johneh Shankar
    Johneh Shankar
  • 3 days ago
  • 3 min read

Read in English here


தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநிலத்தின் அரசியல் வரைபடமே தலைகீழாக மாறியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் (TVK) யாரும் எதிர்பார்க்காத ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தெருவெங்கும் கொண்டாட்டங்கள், சிவப்பும் மஞ்சளுமான தவெக கொடிகள் எனத் தமிழகமே அதிர்கிறது. ஆனால், இந்த ஆரவாரங்களுக்கு நடுவே, நாம கவனித்துப் பேச வேண்டிய சில கசப்பான உண்மைகள் இருக்கின்றன.


நாம எதை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள, முதலில் இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது என்பதை எதார்த்தமாகப் பார்க்க வேண்டும்.


இரண்டு உந்துதல்கள்: சலிப்பும் ஒருவித ஈர்ப்பும்

இந்த வெற்றி வெறும் கொள்கைகளால் மட்டும் வந்ததல்ல; இரண்டு விதமான தீவிரமான எண்ணங்களின் வெளிப்பாடு: ஏமாற்றம் மற்றும் தலைவர் மீதான கிரேஸ் (Dopamine).

  • ஏமாற்றம்: பல தசாப்தங்களாக மாறி மாறி வந்த திராவிட அரசியலால் ஒரு சலிப்பு ஏற்பட்டிருந்தது. அந்த 'மாற்றத்திற்கான' தேடல், பழைய துருபிடித்துப்போன அமைப்பிற்கு எதிரான ஒரு பிடிவாதமான முடிவாக மாறியுள்ளது.

  • தலைவர் மீதான (சினிமா) மோகம் : விஜய் என்ற நட்சத்திரத்தின் மீதான ஈர்ப்பு தரும் ஒருவித உற்சாகம். ரசிகர்களாக இருந்தவர்கள் வாக்காளர்களாக மாறிய அந்தத் தருணத்தில், சிந்திப்பதை விட உணர்ச்சிகளுக்கே முக்கியத்துவம் அதிகம் இருந்தது.

இது இந்த டோபமைன் (dopamine) தலைமுறையின் இயல்பின் வெளிப்பாடும் கூட.


வரலாற்றில் முதன்முறையாக குழந்தைகளும் இந்த தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை ஒதுக்கி விட முடியாது. பெரும்பான்மையான தாத்தா பாட்டிமார்கள் பேரன் சொன்னான், பேத்தி சொன்னாள் என்று விசிலுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

ஆனால், நாம ஒரு உண்மையை ஒத்துக்கிட்டே ஆகணும்: அதீத சலிப்பு, அதீத சினிமா மோகம் இந்த இரண்டு உணர்வுகளுமே நம்முடைய 'சுயசிந்தனையை' ஒரு கட்டத்தில் மழுங்கடிக்கச் செய்யும். கோபத்திலோ அல்லது தீவிரமான அபிமானத்திலோ ஒரு முடிவை எடுக்கும்போது, அந்தத் தலைமைக்குப் பின்னால் இருக்கும் சவால்களை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.


வெற்றிக்கான புதிய இலக்கணம்

தேர்தலில் வெற்றி பெறுவது அல்லது தோற்பது என்பதைப் பார்க்கும் விதத்தில் ஒரு பெரிய மாற்றம் நமக்குத் தேவை. தேர்தலில் ஜெயிப்பது என்பது ஒரு பயணத்தின் 'முடிவு' கிடையாது; அது அந்தப் போர்க்களத்திற்குள் நுழைவதற்கான அனுமதிச் சீட்டு (Entry Ticket) அவ்வளவுதான்.

தேர்தல் முடிவுகள் ஒரு கட்சி ஜெயித்துவிட்டதாகவோ அல்லது தோற்றுவிட்டதாகவோ தீர்மானிப்பதில்லை. அவர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் என்ன செய்கிறார்கள் என்பதுதான் அவர்களின் உண்மையான வெற்றியை வரலாற்றில் பதிவு செய்யும்.

கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால், விஜய் இன்னும் ஜெயிக்கவில்லை என்பது நமக்கு புரியும் (புரிய வேண்டும்). மிகக்கடுமையான சவால்கள் நிறைந்த ஒரு களத்திற்குள் அவருக்கு ஒரு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. இனி அவர் திரையில் பார்ப்பது போன்ற 'பஞ்ச் டயலாக்' வில்லன்களைச் சந்திக்கப் போவதில்லை; நிஜமான '4 முரட்டுக்காளைகளுடன்' அவர் மோதியாக வேண்டும்:

  1. வேலைவாய்ப்பின்மை: படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்குப் புதிய வழிகளைக் காட்டுவது.

  2. மாநிலக் கடன்: பொருளாதாரச் சுமையிலிருந்து தமிழகத்தை மீட்டெடுப்பது.

  3. கல்வி & கட்டமைப்பு: மேடைப் பேச்சுகளைத் தாண்டி, தரமான கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வது.

  4. சட்டம் & ஒழுங்கு: பயமற்ற நிர்வாகத்தை உறுதி செய்வது.


நம் அனைவரின் பொறுப்பு

விஜய்க்கு இவ்வளவு பெரிய வெற்றியைத் தந்ததன் மூலம், தமிழக மக்கள் அவர் தோளில் தாங்க முடியாத ஒரு பாரத்தை ஏற்றியிருக்கிறார்கள். இந்த வெற்றி ஒரு பரிசு மட்டுமல்ல; அது மக்களிடம் அவர் வாங்கியிருக்கும் ஒரு பெரிய 'கடன்'. அதைச் செயல்பாடுகள் மூலம் தான் திருப்பிச் செலுத்த வேண்டும்.


இப்போது நாம் செய்ய வேண்டியது, ஆரவாரமான கொண்டாட்டங்களைக் குறைத்துக்கொண்டு ஆக்கபூர்வமான விவாதங்களில் இறங்குவதுதான்:

  • ஒவ்வொரு தொகுதியிலும்: தலைவரை வழிபடுவதை நிறுத்திவிட்டு, நம் தொகுதி அளவில் என்ன தேவை என்பதைப் பற்றிப் பேசத் தொடங்குவோம். நம் பகுதி சட்டமன்ற உறுப்பினரை (MLA) எப்படி வேலை செய்ய வைக்கலாம், அவருக்கு எப்படி ஒத்துழைக்கலாம் என்று யோசிப்போம்.

  • பொறுப்புள்ள குடிமகன்: அரசு என்பது மக்கள் எவ்வழியோ அவ்வழிதான். ஒரு கட்சியை ஆதரிப்பது என்பது அவர்கள் செய்யும் தவறுகளையும் சேர்த்துத் தாங்குவது அல்ல; சரியான கேள்விகளைக் கேட்டு, ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக அவர்களுடன் இணைந்து செயல்படுவதுதான்.


இலவசம் எனும் மாயை: மக்கள் நலன் காக்க நாம் கொடுக்கப்போகும் விலை

இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு நடுவே, பலரும் கவனிக்கத் தவறிய ஒரு முக்கியமான விஷயம் — பொருளாதார எதார்த்தம். தவெக-வின் வாக்குறுதிகள் கவர்ச்சிகரமாக இருந்தாலும், தமிழகத்தின் இன்றைய நிதிநிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.


பொருளாதார உண்மை: 2025-26 பட்ஜெட் மதிப்பீடுகளின்படி, தமிழகத்தின் மொத்தக் கடன் 2026 மார்ச் மாதத்திற்குள் சுமார் ₹9.30 லட்சம் கோடியைத் தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், மாநிலத்தின் வருவாயில் சுமார் 21% வெறும் வட்டி கட்டுவதற்கே செலவாகிறது. நாம் இன்னும் அதிகமான 'இலவசங்களை' எதிர்பார்க்கும்போது, ஏற்கனவே கடனில் இருக்கும் அரசு, அதிக வட்டிக்கு மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது.  


நாம் செய்ய வேண்டிய தியாகம்: ஒரு உண்மையான வெற்றியை அடைய வேண்டுமென்றால், "என் குழந்தையின் எதிர்காலத்தை அடகு வைத்து எனக்கு இந்த இலவசம் வேண்டாம்" என்று சொல்லும் துணிச்சல் நமக்கு வேண்டும். ஒரு தேவையற்ற இலவசத்திற்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும், நம் வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்க்கக்கூடிய ஒரு தொழிற்சாலையையோ அல்லது ஒரு தரமான அரசு மருத்துவமனையையோ உருவாக்கும் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கிறது. இந்த புதிய தலைமையை நாம் உண்மையாக ஆதரிக்க விரும்பினால், உடனடி இலவசங்களை விட நீண்ட காலக் கட்டமைப்பு வசதிகளுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

இதைச்செய்ய நாம் தயாராக இருக்கிறோமா? வாருங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நம் எண்ணத்தைப் பதிவு செய்து ஒரு மின்னஞ்சல் அனுப்புவோம் - இலவசங்கள் வேண்டாம் என்று. suggestions@tvkvijay.com என்ற முகவரிக்கு உங்கள் கருத்தை அனுப்புங்கள்.

இறுதிச் சிந்தனை

களம் தயாராகிவிட்டது, சவால்களும் முன் நிற்கின்றன. இது வெறும் விஜய்யின் போராட்டம் மட்டுமல்ல—நம் அனைவருக்குமானது. ஸ்கோர் போர்டைப் பார்ப்பதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறைக்கான திட்டங்களைப் பார்ப்போம். அப்போதுதான் இந்த மாபெரும் வெற்றி ஒரு 'உண்மையான வெற்றி'யாக மாறும்.



 
 
 

Comments


© 2023 by Johneh Shankar.

Thinks to live.
Writes to live forever.

Welcome to my Blog. Lessons I've learnt, learning and will learn in my life will come to stay here as words from the bottom of my heart. Thank you for visiting.

bottom of page