உமையாளுக்கு - சில கவிதைகள்
- Johneh Shankar

- Sep 21
- 2 min read
Updated: 15 hours ago
குரங்காய் அலைந்து,
கரடியாகக் கத்தி,
நாயாகப் பாடுபட்டு,
மாடு போலச் சுற்றி,
கழுதை போல உழைத்து,
எறும்பாய்த் தேய்ந்து,
ஆட்டைப் போல பயந்து,
ஒவ்வொரு நாளும் கடந்தாலும்
இராத்திரியில் அன்பு மகள்
கையைச் சுற்றி கழுத்தை அணைத்து
நெற்றியோடு நெற்றி வைத்து
நிம்மதியாய்த் துயில் நுழையும்
அந்த நொடி மட்டும்
சிங்கத்தைப் போல சிலிர்த்து வெளிப்படுகிறது
அப்பனின் மூச்சுக்காற்று!

உன் சிறுவண்டியில் என்னையும் ஏற்றிச் செல்வாயா?
உன் மிட்டாயில் ஒரு கடி எனக்குத் தருவாயா?
உன் தோளில் என்னைத் தூக்கிக் கொள்வாயா?
உன் பொம்மையோடு என்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்வாயா?
இப்படி எத்தனையோ கோரிக்கைகள் வைக்கிறேன் உன்னிடம் ஒவ்வொரு நாளும்!
‘நீயும் என்னை மாதிரியே சின்னப்பிள்ளையா வளர்ந்த உடனே செய்கிறேன்’ என்கிறாய் மழலை மொழியில் நீ!
உன்னை வளர்ப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன் நான்,
என்னைக் குழந்தையாக்கிக் கொண்டிருக்கிறாய் நீ!
கட்டியணைத்து உறங்கும் கரடி பொம்மை முதல்
காலில் இடறி காயப்படுத்திய சிறு கல் வரை,
எல்லாவற்றுக்கும் உயிர் இருக்கிறது,
உனது அறிவியல் புத்தகத்தில்!
பொம்மையைக் கொஞ்சுகிறாய்,
உன் காலை இடறியதற்காய் அந்தக் கல்லைத் தண்டிக்கிறாய்!
இனி தடுக்குவியா, தடுக்குவியா? என்று.
தூணிலும், துரும்பிலும் இருக்கும் கடவுள்தான்
உன் கொஞ்சலையும், தண்டனைகளையும் பெற்றுக்கொள்கிறார்
என்பதை எப்படிப் புரியவைப்பாய்,
கல்லாய்ப் போன மனித மனங்களுக்கு!
—--
அப்பா கைய விடுங்கப்பா,
என்று என் கையை உதறிவிட்டுத்
தனியாக நடந்து செல்வதில் பேருவகை உனக்கு!
உன் மேற்சட்டையின் ஓரத்தில்,
தையல் பிழையாய் காற்றில் ஆடும் அந்த
ஒற்றை நூலிழையையாவது பிடித்துக் கொண்டால்தான்
நிம்மதி எனக்கு!
தைரியம் பழகுகிறாய் நீ!
அடம் பிடிக்கப் பழகுகிறேன் நான்!
—
மகளே!
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கிறோம்…
நீ குப்பை உணவுகளை வேண்டாம் என்று ஒதுக்கும் போதும்,
நல்லுணவை ஒதுக்காமல் உண்ணும் போதும்,
தொலைக்காட்சி வேண்டாம், வெளியே விளையாடலாம் வா
என்று எங்களைத் திருத்தும் போதும்,
சாப்பிடும் போது செல்பேசியைப் பார்க்கக்கூடாது
என்று கண்டிக்கும் போதும்,
பிடித்த உணவாகவே இருந்தாலும், ‘போதும்’ என்று சொல்லும் போதும்,
‘வாங்கப்பா’, ‘தாங்கம்மா’ என்று மரியாதை குன்றாது
கொஞ்சும் போதும்,
புத்தகத்தைத் தலைகீழாய் பிடித்தபடி
‘உறங்கும் முன்பு படிக்க வேண்டும்’ என்று
படுக்கையில் வாசித்தலை நேசிக்கும்
உன் எண்ணத் துளிரைப் பார்க்கும் போதும்,
தேவாரமும், திருவாசகமும் உன்
மழலை மொழியில் கேட்கும் போதும்,
ஆத்திசூடியை நீ மனப்பாடமாய்ப் பாடும் போதும்,
ஆங்கிலத்தை உன் உதடுகள் உதறித் தெளிக்கும் போதும்,
அன்பாகப் பேசும் போதும், முகம் சற்றே வாடியிருந்தாலும்
‘நான் இருக்கிறேன், பயப்படாதே, பார்த்துக்கறேன்’ என்று
ஆறுதலாய்க் கொஞ்சும் போதும்,
சாலையில் செல்லும் யாரோ ஒருவருக்கு
உதவி செய்ய நீ என்னைப்பணிக்கும் போதும்,
மகளே, உன்னைப் பேணி வளர்த்து
இச்சமூகத்தில் விதைப்பதில் முதல் பருவத்தை
மிகச்சரியாகவே செய்திருக்கிறோம், உன்னை இவ்வுலகம் சான்றாள்
எனக் காதாரக் கேட்கும் அந்நாளை எதிர்நோக்கி
இந்நாளில்
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கிறோம்…
இப்படியே வளர்ந்து வா மகளே!






Comments