top of page

தமிழ் மொழியின் தத்துவச் செறிவு

  • Writer: Johneh Shankar
    Johneh Shankar
  • Dec 26, 2022
  • 2 min read

தமிழ் - ஒரு தத்துவ மொழி, நமக்கு தாய்மொழியாக அது எளிமையாகக் கைவரப்பெற்றதால், பரம்பரைச் சொத்தை அடமானம் வைத்து சீட்டாடுவது போல, நாம் தமிழை வைத்து வாழ்வியல் இன்பங்களை மட்டுமே ஈட்டிக் கொண்டிருக்கிறோம்.


தமிழ் மொழியின் தத்துவச் செறிவு என்பது அதன் எழுத்து அமைப்பில் தொடங்குகிறது. தமிழின் ஒவ்வொரு சொல்லின் உருவாக்கமும் ஆழ்ந்த புரிதலின் அடிப்படையில் அமைந்துள்ளது வியப்பிற்குரிய ஒன்றல்ல, ஆய்வுக்கும் சிந்தனைக்கும் உரிய தகவலாகும்.


ஆளும் தன்மையும் கடமையும் கொண்டதால் ஆண், பேணும் தன்மையும் கடமையும் கொண்டதால் பெண் - என்று ஆண், பெண் எனும் சொற்களுக்கு வேறு எந்த மொழியிலும் இப்படியான தத்துவ அடிப்படை இருப்பதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் man woman என்ற பதங்களின் அடிப்படையில் எந்தத் தத்துவமும் இல்லை. விமன் (woman) எனும் பதமே ஆதி ஆங்கிலத்தில் இருக்கவில்லை, பெண்ணியவாதிகள் கவனிக்க. பிற்காலத்தில், ஜெர்மானிய மொழியில் இருந்து கடன் வாங்கி உருவாக்கப்பட்டதே விமன்/வுமன் எனும் பதம். Etymology-ஆழப் படிக்கின் இதன் விவரங்கள் புரியும்.


ஆளுதல் என்பது ஆண் என்றவுடன் ஆணாதிக்கமாக இதனை எடுத்துக் கொள்வது சிறுமை. ஆளுதல் என்பதற்குள், வெறும் ஆட்சி செய்தல் எனும் பொருள் தவிர, காத்தல், மேம்படுத்துதல் போன்ற பணிகளும் உண்டு, இதனைப் பெண்களும் சரி சமமாக செய்ய வல்லவர்கள் என்பதிலும் ஐயமில்லை. ஆனால் குடும்பம் எனும் நோக்கில், ஆளும் கடமை ஆணுக்கு, பேணும் கடமை பெண்ணுக்கு. பேணுதல் சரியாக இல்லையென்றால் ஆளுமையும் சரியாக அமைவது இல்லை. சரி, விசயத்திற்கு வருவோம்.


ஒரு சொல் குறிக்கும் பல பொருட்கள், ஒரு பொருள் குறித்த பல சொற்கள், அவற்றின் contextual வேறுபாடுகள் போன்றவற்றில் தமிழ் மிகவும் ஆழமான ஒரு சொல்லகராதியைக் கொண்டிருக்கிறது. பேச்சு வழக்கில் நாம் பயன்படுத்துவது தமிழின் நுனிப்புல் மீது இருக்கும் பனித்துளி அளவிலான சொற்கள் தான்.


ஆணவம்


தமிழ்ச் சொற்களின் தத்துவச் செறிவு அதன் சொல் பகுப்பின் நுட்பத்தில் இருக்கிறது. அப்படி நான் சமீபத்தில் அறிந்து கொண்ட ஒரு சொல், "ஆணவம்" என்பது. தமிழ்த் தத்துவத்தின் அடிப்படைப் பொருளாக இருப்பது ஆணவம். இதற்கு கீழ்க்கண்ட பொருட்களை வாழ்க்கையின் பல்வேறு பக்குவ நிலைகளுக்கு ஏற்பப் புரிந்து கொள்ளலாம்.

  1. நான் எனும் செருக்கு

  2. என்னால் மட்டுமே முடியும் என்ற கர்வம்

  3. என்னிடம் இருக்கிறது பிறரிடம் இல்லை எனும் கர்வம்

  4. எனக்கு எல்லாம் தெரியும் எனும் பேதைமை

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இந்தச் சொல்லின் உண்மையான ஆழமான அர்த்தத்தை சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் திருவருட்பயன் வகுப்பில் தெரிந்து கொண்டேன்.


ஆளுமை + அவம் = ஆணவம். இந்தப் புரிதல் பல கூறுகளை மாற்றியமைக்கிறது. ஆணவமாக நான் இல்லை என்பது, தனித்து வாழ்வதோ, பிறரை மதித்து வாழ்வதோ, பிறருக்கு உதவுவதோ அல்லது பிறரை சமமாகக் கருதுவதிலோ வெளிப்படுவது அல்ல.


ஆளுமைக்கு ஏற்படும் அவம், என்னுடைய சமூகக் கடமைகளை நான் செய்யாமல் ஒதுங்கி இருப்பது தான் உண்மையில் ஆணவம். இதற்குள் மற்ற எல்லா அர்த்தங்களும் அடங்கி விடும்.


சமூகத்தை "அதன் போக்கில் போகட்டும், நடப்பது நடக்கட்டும். நான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்வதில்லை,யாரையும் ஏமாற்றுவதில்லை. ஆணவமில்லாமல் நான் வாழ்கிறேன், தீயவர்கள் அனைவரும் ஆணவத்தில் ஆடுகிறார்கள்" என்று நன்மதியாளர்கள் ஒதுங்கி இருப்பது எவ்வளவு பெரிய மடமை என்பது இப்போது புரியத்துவங்குகிறது.


தீயவர்கள் அல்லது குற்றம் செய்பவர்கள் செயல்படுவது ஆணவத்தினால் அல்ல, அறியாமையினாலும், செயல் வேகத்தினாலும். நல்லவர்கள் ஒதுங்கி இருப்பது அவர்களது ஆணவமின்மையை விட அதிகமாக  ஆணவத்தையே காட்டுகிறது. உண்மையில் கடமையில் இருந்தும், சமூகத்தில் இருந்தும் ஒதுங்கி இருப்பதே ஆணவத்தின் வெளிப்பாடு.

எனவே, நல்லவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒதுங்கி, தனித்து இயங்குவதை விட ஒன்று சேர்ந்து, சமூகத்தில் நல்ல மாற்றங்களை விதைக்க இணைந்து செயல்பட்டால் நமது ஆளுமைக்கு ஏற்பட்டுள்ள அவத்தை (குறையை) களைந்து உய்வு பெறலாம் என்பது உறுதி.


உங்களுக்கு "ஆணவம்" இருக்கிறதா? இந்தக் கட்டுரை உங்களுக்குப் பயன் அளித்ததா? பின்னூட்டத்தில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!




1 commento


Saiva Siddhanta Perumandram (sspm)
Saiva Siddhanta Perumandram (sspm)
26 dic 2022

மனம் - உயிர் -ஆணவம்: விளக்கவுரை https://youtu.be/Sv_1q6ZDKjo

Mi piace

© 2023 by Johneh Shankar.

Thinks to live.
Writes to live forever.

Welcome to my Blog. Lessons I've learnt, learning and will learn in my life will come to stay here as words from the bottom of my heart. Thank you for visiting.

bottom of page