top of page

காட்சி பூதம் - சிறுகதை - பாகம் 2 Spirit of Sight - Story - Part 2

  • Writer: Johneh Shankar
    Johneh Shankar
  • Jun 1, 2023
  • 3 min read

குறிப்பு: இந்த சிறுகதை என்னுடைய சொந்த கற்பனை அல்ல. நான் பார்த்த ஒரு யூடியூப் காணொளியின் மேம்படுத்தப்பட்ட மொழிபெயர்ப்பு மட்டுமே. முதல் பாகம் படிக்க இங்கே சொடுக்கவும்.


சென்ற பாகத்தின் தொடர்ச்சி: பதின்ம வயது வாள் வீரனான நமது கதாநாயகன் தனது வீட்டில் ஒரு நாள் மாலை வாளோடு அளவளாவிக் கொண்டிருக்கையில், சட்டென்று தோன்றியது ஒரு மாய பூதம். தன்னை 'காட்சி பூதம்' என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அது, அவன் பார்க்க விரும்பிய காட்சிகளையெல்லாம் தனது மாயத்திரையில் காண்பித்தது. சற்றேறக்குறைய நமது இணையம் போல. ஆரம்பத்தில் உலகின் சிறந்த வாள் வீரன், போர் முறைகள் இவற்றையெல்லாம் கேட்டு பார்த்துக்கொண்டே வந்த நமது வீரன், தன் வயதுக்கே உண்டான கோளாறான பெண்ணழகைக் காணத் தொடங்கினான். உலகின் பேரழகியை பார்த்தவன், மறு நாளே அவளது குளியலறையைக் காண காட்சி பூதத்தை ஏவினான்.


தற்போது:


நாட்கள் செல்லச் செல்ல அவனுக்குள் பல மாற்றங்கள்.


1. இப்போதெல்லாம் வாள் பயிற்சி ஓரிரு மணி நேரங்களில் முடிந்து விடுகிறது, காட்சி பூதத்திடம் பார்க்க வேண்டியவை நிறைய இருக்கின்றனவே. அதனால் அவசரம் அவசரமாக பயிற்சியை முடித்து விட்டு வீடு நோக்கி விரையத் தொடங்கியிருந்தான் நமது வாள் வீரன்.


2. வீடு நோக்கி வரும் போது அவனைப் பார்த்து கை அசைக்கும் கன்னிப்பெண்களுள் ஒருத்தி அவன் மீது உயிரையே வைத்திருந்தாள். இப்போது அவனுக்கு இந்த பெண்கள் எல்லாம் அழகின் எதிர்ப்பதமாக தெரியத் தொடங்கியிருந்தார்கள். அவர்களது கை அசைப்புக்கு இப்போது அவன் புன்னகை செய்வதில்லை, அவர்கள் இதயங்களை புண் செய்யத் தொடங்கியிருந்தான்.


வீடு நுழைந்ததும் காட்சி பூதம் அவனை வரவேற்றது. இப்போதெல்லாம் நமது வாள் வீரன் அதற்குக் கட்டுப்பட்டு நடக்கும் அடிமையாக மாறி விட்டான். அதன் முகமில்லா முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரமும், கோரமும் வெளிப்படத் தொடங்கியிருந்ததைக் கூட அவன் கவனித்ததாகத் தெரியவில்லை. அவன் சித்தம் முழுதும் காட்சி பூதம் காட்டிய அழகியின் வசீகரத்திலேயே வயங்கிக் கிடந்தது.


பத்து ஆண்டுகள் கடந்தது... இப்போதெல்லாம் காட்சி பூதம் அவனது சுத்தம் செய்யப்படாத அறையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து வியாபித்திருந்தது. வாளைத் தூக்கி நிறுத்தவும் சக்தி இல்லாதவனாக மாறியிருந்தான் நமது வாள் வீரன். அவனை நோக்கி ஆவலாக கண்ணடித்த கன்னிகள் இப்போது அவனை ஏறெடுத்தும் காண்பதில்லை. வெறுமையின் மொத்த உருவமாய் இருந்தான். ஆனாலும் கண்கள் மட்டும் தினவு தீர்ந்ததாய் இல்லை. அழகிகளும், அவர்களது மெல்லிய ஆடைகளுமே அவனது சிந்தனையை ஆக்கிரமித்திருந்தன. அப்படி ஒரு நாள் அவன் மயங்கித் தெளிந்து விழிக்கையில் சூரியன் மேற்கில் மங்கிக் கொண்டிருந்தான். அந்த வான் சிவந்த மாலைப் பொழுதில் ஊருக்குள் வரிசையாக நுழைந்தன கரிய நிற குதிரைகள் பூட்டிய வண்டிகள்.


அவனது ஊரைச் சூறையாட எதிரிகள் நுழைகிறார்கள். இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. 'இப்படி ஒரு நிலை என்றாவது வரும், அப்போது நீ வாள் வீசிப் போர் செய்து இவர்களை விரட்ட வேண்டும்' என்று அவன் தாய் மரணப்படுக்கையில் சொல்லிச் சென்றிருந்தாள். ஆனால் இவர்கள் வரும் போது தான் இப்படி பலமிழந்து நிற்பதாய் அவன் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.

உள்ளே திரும்பிப் பார்த்தான். வெண்மையே உருவான காட்சி பூதம் இப்போது இருளினும் கரியதாய், இரு விழிகள் சிவந்து பெரியதாய், வஞ்சப் புன்னகையோடு நின்று கொண்டிருந்தது.


"யார் நீ" - பத்து வருடங்களுக்கு முன் அவன் கேட்ட அதே கேள்வி... ஆனால் அப்போதிருந்த உறுதி அவன் குரலில் இல்லை. நடுக்கம் தான் இருந்தது.


"நானே உன் ஆணவம். உன் ஆளுமைக்கு அவம் செய்ய வந்தேன்"

"பத்து வருடத்திற்கு முன்பாகவே என்னோடு சண்டையிட்டிருக்கலாமே"


"அப்போது நீ நீயாக இருந்தாய். உன்னிடம் உறுதி இருந்தது. உன் சிந்தனையில் தெளிவிருந்தது. உன் பார்வையில் ஒளி இருந்தது. உன்னைத் தோற்கடிக்க என்னால் நிச்சயம் முடிந்திருக்காது. இப்போது உன் கண்களின் வழியாகவே உன்னிடம் இருந்த உறுதி, தெளிவு, ஒளி அனைத்தையும் வெளியே எடுத்து விட்டேன். இனி உன்னை வெல்வது எளிதினும் எளிது."

தலையைப் பிடித்துக் கொண்டு தெருவை நோக்கி ஓடினான் வாள் வீரன். ஊருக்குள் நுழைந்த கரியாடைக் கொள்ளையர்கள், ஊரைச் சூறையாடிக் கொண்டிருந்தனர். திரும்பிய திசையெல்லாம் மரண ஓலம். வாளைத் தேடினான். வாசலின் ஒரு ஓரத்தில் துருப்பிடித்துப் போய் இருந்தது. கைப்பிடி அழுக்கேறிப் போயிருந்தது. தூக்க வலுவில்லை. தட்டுத் தடுமாறி நடுத்தெருவுக்கு வந்து நின்றான். அவனையோ, அவனது ஊரையோ காணச் சகியாதவனாய் சூரியன் தன்னை முழுவதும் மறைத்துக் கொண்டான். எஞ்சியிருந்த வெளிச்சம் சுற்றியிருந்த தீச்சுவாலைகளோடு சேர்ந்து மங்கிக் கொண்டிருந்தது.


இருள், வாள் வீரனை முழுமையாக விழுங்கிச் சீரணித்தது.


நரகம் என்பது யாதெனில் நீ யாராக இருக்கிறாயோ அவன், நீ யாராக இருந்திருக்கக்கூடும் என்பவனைச் சந்திக்கும் இடமே.

இந்தக் கதையில்,

  • வாள் வீரன் - நமது இளமை

  • காட்சி பூதம் - நாம் காணும் காட்சிகள், நவீன தொழில்நுட்பங்களாகிய இணையம், செல்போன், டிவி போன்றன - காட்சி அல்லது கண் எனும் புலன், நம் மனத்தோடு நெருங்கிய தொடர்புடையது. மனம் செம்மை அடைவதும், சீரழிவதும் கண்ணால் நாம் காணும் காட்சிகளைக் கொண்டே இருக்கிறது.

  • வாள் பயிற்சி - நாம் நமது இளமையில் கற்றுக் கொள்ள வேண்டியவை: மன உறுதி, சிந்தனைத் தெளிவு மற்றும் உழைப்பு.

  • கருப்புக் குதிரையில் வரும் எதிரிகள் - சமுதாயத்தில் நிலவும் அறியாமை, கொடுங்கோல் ஆட்சி, அறம் தவறிய தொழில்முறைகள், கருணையில்லா ஆட்சியாளர்கள்.

1970 தொடங்கி 2023 வரை, தமிழர்களாகிய நாம் சினிமா எனும் போதையில், மூன்று தலைமுறைகளாக இழந்தவை ஏராளம்.



இந்தக் காட்சி பூதமானது, கற்பனையிலும், சிந்தனையிலும் கரை கண்ட தமிழர்களை கடலுக்குள் மூழ்கடித்துக் கொல்லப் பார்க்கிறது. இதில் இருந்து நாம் விடுபட்டே தீர வேண்டும். இல்லையேல், தமிழகம் சூறையாடப் படும் போது (வெளிப்படையாகவே) நாம் ஒன்றுக்கும் இயலாத கையறு நிலையில் இருப்போம் என்பது திண்ணம்.


குழந்தைகள் தற்போது செல்போன், இணைய வசதி கொண்ட டிவி போன்றவற்றில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அவர்களை அதிலிருந்து மீட்டு வாசிப்பில் ஈடுபடுத்துங்கள். கலை, அறிவியல்,தத்துவம், சண்டைப் பயிற்சி என அவர்களுக்கு எதில் விருப்பமோ அதில் சிறக்க வழியமைத்துக் கொடுக்கும் கடமை பெற்றோர்களுடையது. அதற்கு இடைஞ்சலாக ஒரு காட்சி பூதம் உங்கள் வீட்டின் வரவேற்பறையிலும், உங்கள் கைகளிலுமே உடன் இருக்கிறது. கவனம் தேவை.


நன்றி.





Comments


© 2023 by Johneh Shankar.

Thinks to live.
Writes to live forever.

Welcome to my Blog. Lessons I've learnt, learning and will learn in my life will come to stay here as words from the bottom of my heart. Thank you for visiting.

bottom of page