உமையாளுக்கு ஒரு கடிதம் - கடற்கரைப் பயணம்

மகளே உமையாள், இன்று உனக்கு விவரம் புரியத் துவங்கி முதன் முறையாக கடற்கரைக்குக் கூட்டிச் சென்றிருக்கிறேன். ஆற்று நீரைக் கண்டு அஞ்சாத நீ கடலின் அலைகளைப் பார்த்துச் சற்றே மிரண்டுவிட்டாய். உன் பொற்பாதத்தை அலை தொட்ட நொடியில், தொடுவானத்தில் உதயமாகும் சூரியனை எதிர்த்து ஒரு பறவை சட்டென மேலெழும்பியதைக் கண்டேன். கடலாய் உருமாறி சிக்கிக்கொண்டிருந்த ஒரு தேவதை உன்னால் சாபவிடுதலை பெற்றதைப் போல நினைத்துக்கொண்டேன்.
கடலே சாபவிடுதலைக்கான ஒரு உவமை தானே. அசையாமல், இயங்காமல் கிடந்தபடியே கிடக்கும் கரைதான் சாபம். எந்த வெற்றியும் இல்லாவிட்டாலும் மீண்டும் மீண்டும் இயங்கியபடியே இருக்கும் அலைகளே விடுதலை.
இந்தக் கடற்கரை மனிதனின் ஆதியைப் பார்த்திருக்கிறது, அந்தத்தையும் பார்க்கும். நாம் இப்போதைக்கு அதன் வரலாற்று ஏட்டில் ஒரு காற்புள்ளி. ஆனால் உன் வாழ்க்கையின் வரலாற்றில் இந்தக் கடல் நிச்சயம் சில பக்கங்களையாவது நிரப்பும் என நினைக்கிறேன். போலவே இப்பெருங்கடலின் ஏட்டில் நீ சில பக்கங்களையாவது ஆக்கிரமித்துக் கொள்.
அதிகம் படி, அளவாகப் பேசு, அன்பைப் பெருக்கிக்கொள், ஆர்வத்தை வற்ற விடாதே, அடக்கத்தை ஆயுதமாக்கு, அஞ்சாமையை அகலவிடாதே, அறத்தைவிட்டு அகன்று விடாதே, இவை அல்லாதவற்றை அன்னியமாக வை! இவை போதும், வரலாற்றில் இடம் பிடிக்க.
இவையெல்லாம் நான் படித்துத் தெரிந்து கொண்டவையே, நீ வாழ்ந்து காட்டு! நான் துணையாக நிற்கிறேன்.
கடற்கரையில், என் செருப்பில் உன் சின்னஞ்சிறு கால்களை நுழைத்துக் கொண்டு நீ நடக்கத் தொடங்கியிருக்கும் இந்நாட்களில் நான் எடுத்து வைக்க வேண்டிய அடிகளைக் கவனத்தோடு வைக்கிறேன். எனக்கான பொறுப்புகளை நான் உணர்கிறேன்.
உனக்காகப் பொன்னும் பொருளும் சேர்ப்பதில் கவனமாய் இருக்கிறாள் உன் அம்மா, உனக்கான நினைவுகளைச் சேர்ப்பதில் விளையாட்டாய் இருக்கிறேன் நான். விளையாட்டிலும் கவனம் உண்டு. நினைவுகள், நாளை உன் அறிவுக்குத் திசைகாட்டி. கசப்பான நினைவுகளே மனிதர்களை கெடுமதியாளர்களாகத் திசைமாற்றி விடுகின்றன. என்னால் இயன்றவரை உனக்கான நினைவுப் பேழையில் பொற்காசுகளும், முத்துக்களும் மட்டுமே கொண்டு சேர்க்க எறும்பு போல இயங்குகிறேன். அதில் தவறுதலாக நஞ்சுத் துகள்கள் விழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.
அப்படி ஒரு பொன்னான நினைவாக இந்த நாள் உன் நெஞ்சில் இருக்கும் என்று நம்புகிறேன். நாம் ஒன்றாக மீண்டும் கடற்கரைக்குச் செல்லும் போது சில மாதங்களோ, சில ஆண்டுகளோ கூட கடந்திருக்கலாம். ஆனால் கடற்கரையை முதன் முதலாகக் கண்கள் விரிய நீ பார்த்த இந்த முதல் நாளில், உன் முகத்தில் தோன்றிய முதல் சிரிப்பு மட்டும் அப்படியே என் நெஞ்சில் இருந்து ஒளிபரப்பிக்கொண்டே இருக்கும்.
மீண்டும் அடுத்த கடிதத்தில். அன்புடன், அப்பா.






Comments